

சுரேந்தர், காஜா
சென்னை: மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர் கணேஷ். தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சேத்துப்பட்டைச் சேர்ந்த, தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் சுரேந்தர், அந்நிறுவனத்தில் இயக்குநராக உள்ள சூளைமேட்டைச் சேர்ந்த காஜா மொய்தீன் பஷித் ஆகியோரது அறிமுகம் கிடைத்தது.
இந்நிலையில், தொழிலை விரிவுபடுத்தும் வகையில் தன்னிடமிருந்த 238 பவுன் நகைகளை (சுமார் ரூ.2 கோடி மதிப்பு) வங்கியில் அடமானம் வைத்து ரூ.1 கோடி பணம் பெற்றிருந்தார்.
அதை மீட்க முடியாமல் தவித்தார். அப்போது, சுரேந்தர் நாங்கள் உங்கள் நகைகளை மீட்டு தருகிறோம். மேலும், எங்கள் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்தால் அதிக பணம் தருகிறோம். அதோடு குறைந்த வட்டி என ஆசைவார்த்தை கூறினர். இதையடுத்து, நகை மீட்கப்பட்டு, சுரேந்தர் நிதி நிறுவனத்தில் மறு அடகு வைக்கப்பட்டது.
ஆனால், உறுதி அளித்தபடி நகைக்கான கூடுதல் பணத்தை தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கணேஷ் தனது நகை கடன் முழுவதையும் வட்டியுடன் தந்து விடுவதாகக் கூறி மொத்த நகைகளையும் திரும்பத் தருமாறு கேட்டபோது நகைகள் திரும்ப கொடுக்கப்படவில்லை.
இதனால், விரக்தி அடைந்த கணேஷ் இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், நகை பெற்று மோசடி செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சுரேந்தர், காஜா மொய்தீன் பஷித் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.