

சென்னை: வங்கிக்குள் புகுந்து திருட முயன்று தலைமறைவாக இருந்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். சென்னை, மேற்கு மாம்பலத்தில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.
வழக்கம்போல் கடந்த 4-ம் தேதி இரவு இந்த வங்கி பூட்டப்பட்டது. மறுநாள் காலை ஊழியர்கள் வந்து பார்த்தபோது, வங்கியின் ஷட்டரில் இருந்த 3 பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன.
உள்ளே புகுந்த நபர் வங்கியில் வைத்திருந்த பணம், நகைகளைத் திருட முயன்றுள்ளார். முடியாததால் வங்கி ஆவணங்களை சூறையாடிவிட்டுத் தப்பிச் சென்றது தெரியவந்தது.
கட்டிங் மெஷின்
இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக வங்கியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதன்மூலம் வங்கியில் திருடும் முயற்சியில் ஈடுபட்டது திருவண்ணாமலை மாவட்டம், ஜமீன் கூடலூரைச் சேர்ந்த மோசஸ் சவுந்தர் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில் மோசஸ் சவுந்தர் மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், இவர் வங்கியை நோட்டமிட்டு கடந்த 4-ம் தேதி இரவு கட்டிங் மெஷின் மூலம் வங்கி ஷட்டரின் பூட்டுகளை அறுத்து வங்கியில் நுழைந்து திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.