

ராஜா
மதுரை: கஞ்சா வழக்கில் தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்ததும் தப்பியோடிய கைதியை போலீஸார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் கடந்த 2024 மே 20-ம் தேதி திருச்சி - திண்டுக்கல் சாலையில் அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோயில் அருகே வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற ஆட்டோவை சோதனையிட்டனர். அதில் 30 கிலோ கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணி, மதன்குமார், மதுபாலன், தாமரைக்கண்ணன், மாதவன், ராஜா ஆகிய 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை மதுரை 1-வது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சுதாகர் முன்னிலையில் நேற்று இறுதி விசாரணை நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சவுரிராமன் ஆஜரானார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுதாகர், வழக்கில் தொடர்புடைய 6 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த 6 பேரையும் சிறைக்கு அழைத்துச் செல்ல போலீஸார் ஆயத்தமாகினர். அப்போது, ராஜா மட்டும் நீதிமன்றத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டது தெரியவந்தது. அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.