

படங்கள்: எஸ்.கோபு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி - பாலக்காடு இடையே அகல பாதையில் சென்னை, திருவனந்தபுரம், பாலக்காடு, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், இன்று அதிகாலை பொள்ளாச்சி - எர்ணாகுளம் மெமு ரயில் அதிகாலை 12.30 மணியளவில் பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி பாலக்காடு நோக்கி சென்றுகொண்டு இருந்தது.
அப்போது, பொள்ளாச்சியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அம்பராம்பாளையம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த பாறாங்கல், ரயிலின் முன்பகுதியில் இருந்த தடுப்பு கம்பியில் மோதியது. இதில் பாறாங்கல் இரண்டாக உடைந்து சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி எறியப்பட்டது.
படங்கள் எஸ்.கோபு
ரயில் பாறாங்கல்லில் மோதியதை உணர்ந்த ஓட்டுநர், இது குறித்து மீனாட்சிபுரம் ரயில் நிலைய அதிகாரியிடம் புகார் அளித்தார். இதையடுத்து பாலக்காடு கோட்ட ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பாலக்காடு கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் அம்பு குமார், பாலக்காடு கோட்ட ரயில்வே டிஎஸ்பி பாபு, இன்ஸ்பெக்டர் மிலன் பிக்கோலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.
இது குறித்து ரயில்வே போலீஸார் கூறும்போது, “இன்று அதிகாலை 12.20 மணிக்கு ஹரியானாவில் இருந்து சரக்கு ரயில் பாலக்காடு ரயில் நிலையம் வழியாக பொள்ளாச்சிக்கு சென்றுள்ளது. அப்போது ரயில்வே தண்டவாளத்தில் எந்த பொருளும் இல்லை.
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு கிளம்பிய எர்ணாகுளம் மெமு ரயில் அம்பராம்பாளையம் அருகே வந்தபோது பாறாங்கல்லில் மோதி உள்ளது. இதில் ரயிலுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை. இது குறித்து ரயில்வே போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை கொண்டு வருவதாக தெரிவித்தனர்.