

மகாலிங்கம்
மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பட்டாலியன் பிரிவு காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள இ.கோட்டைப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மகாலிங்கம் (30). இவர் 2023-ம் ஆண்டில் காவல் துறையில் பணியில் சேர்ந்தார். இவரது சகோதரரும் தேனி மாவட்ட காவல் துறையில் பணிபுரிகிறார்.
மதுரையில் உள்ள 6-வது பட்டாலியன் பிரிவில் காவலராகப் பணியாற்றிய மகாலிங்கம், கடந்த சில மாதங்களாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வளாகத்தில் மெயின் கேட் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த அவர்,நேற்று அதிகாலை திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த உயர் நீதிமன்ற காவல் நிலைய போலீஸார் மகாலிங்கத்தின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “மகாலிங்கம் பணியில் சேர்ந்த பிறகு, அவருக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால், அதற்கு மகாலிங்கம் மறுப்புத் தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில்தான், அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என்றனர்.
இறப்பதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில், “எனது இறப்புக்கு வேறு யாரும் காரணம் அல்ல.
இது நானே எடுத்த முடிவு. எனது தற்கொலை குறித்து யாரிடமும் விசாரிக்க வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அவரது தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.