‘மின் இணைப்பு துண்டிக்கப்படும்’ என மின் வாரியம் பெயரில் புதிய சைபர் மோசடி!

உஷாராக இருக்க போலீஸார் எச்சரிக்கை
‘மின் இணைப்பு துண்டிக்கப்படும்’ என மின் வாரியம் பெயரில் புதிய சைபர் மோசடி!
Updated on
1 min read

சென்னை: மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்வாரியம் பெயரில் நள்ளிரவில் போன் செய்து நூதன முறையில் பண மோசடி நடைபெற்று வருகிறது. எனவே, பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

காலத்துக்கு ஏற்ப சைபர் க்ரைம் மோசடிகள் புதுப்புது வடிவங்களில் வருகின்றன. வெளிநாட்டில் பதுங்கியபடி, நம் ஊரில் நடைபெறும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து ஆசை அல்லது பயத்தை தூண்டி நம்மை மோசடி வலையில் திருட்டு கும்பல் சிக்க வைத்து விடுகிறது. அந்த வகையில், சில நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் என பலருக்கு நள்ளிரவில் போன் அழைப்பு வருகிறது.

தற்போது இரவு நேரத்தில் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இதனால், மக்கள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர். மின் துண்டிப்பால் பொதுமக்கள் அவதிப்படுவதை கவனித்த சைபர் கும்பல், பலரை தொடர்பு கொண்டு நீங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என தெரிவிக்கிறது. கட்டணத்தை முறையாக ஆன்லைன் வாயிலாக செலுத்தி விட்டேன் என தெரிவித்தால், நீங்கள் செலுத்திய கட்டணம் அப்டேட் ஆகவில்லை.

எனவே, நாங்கள் அனுப்பும் லிங்கை திறந்து, உடனடியாக மின் கட்டணத்தை செலுத்தவில்லை என்றால், சிறிது நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கின்றனர். உண்மையிலேயே நாம் செலுத்திய மின்கட்டணம் மின்வாரியத்துக்கு முறையாக சென்றடையவில்லையா? என குழப்பம் அடைகின்றனர். மேலும், எதிர் தரப்பினர் அனுப்பும் லிங்கை திறந்து பணம் கட்ட முயற்சிக்கின்றனர்.

அப்போது, எதிர் தரப்பில் உள்ள சைபர் க்ரைம் மோசடி கும்பல் இதை நல்வாய்ப்பாக பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மொத்தமாக சுருட்டி விடுகின்றனர். இது தற்போது ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும், சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ‘‘மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் அழைப்பு மற்றும் குறுந்தகவல், வாட்ஸ்-அப் தகவல்களை நம்ப வேண்டாம். மெசேஜில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம், தெரியாத நபர்களிடம் ஓடிபி, யுபிஐ பின், வங்கி விபரம், ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம், தெரியாத லிங்குகளை கிளிக் செய்யவோ, செயலிகளை பதிவிறக்கம் செய்யவோ கூடாது.

மின்சாரக் கட்டணம் தொடர்பான சந்தேகம் இருந்தால், மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் மட்டுமே சரிபார்க்க வேண்டும். மோசடி நடந்திருந்தால் அல்லது பணம் பறிபோயிருந்தால், உடனடியாக 1930 என்ற சைபர் க்ரைம் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்’’ என்றனர்.

‘மின் இணைப்பு துண்டிக்கப்படும்’ என மின் வாரியம் பெயரில் புதிய சைபர் மோசடி!
போக்குவரத்து விதிமீறல் அபராத விவரம் தெரிவிக்க சென்னையில் 15 இடங்களில் கால்சென்டர் அமைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in