

வேலூர்: குடியாத்தம் அருகே முன்விரோத தகராறில் பாமக பிரமுகர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், கொலையாளி பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை இன்று (நவ.10) அதிகாலை பறிமுதல் செய்ய முயன்றபோது காவல் துறை உதவி ஆய்வாளர் ராஜாவை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேலு (46). பாமகவில் வேலூர் மேற்கு மாவட்ட ‘அன்புமணி தம்பிகள்’ படையின் மாவட்ட செயலாளராக இருந்தவர். இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் உள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பூவரசன் (29) என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்துள்ளது. பூவரசன் மீது ஏற்கெனவே கஞ்சா கடத்தல், திருட்டு மற்றும் ஒரு கொலை உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளி.
இந்நிலையில், ஞானவேலு அதே பகுதியைச் சேர்ந்த ரகு (40) என்பவருடன் நேற்று மாலை சேங்குன்றம் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த பூவரசன், ஞானவேலுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், சாலையின் மறுபக்கத்தில் இருந்த வீட்டுக்குச் சென்றவர் நாட்டுத் துப்பாக்கியுடன் வெளியே வந்து, ஞானுவேலுவை குறிபார்த்து சுட்டுள்ளார். இதில், ஞானவேலு சம்பவ இடத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். ரகுவுக்கு வலது தோள் பட்டையில் நாட்டு துப்பாக்கியின் ரவைகள் பட்டதில் படுகாயம் அடைந்தார். நாட்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டு பூவரசன் தப்பி ஓடினார்.
அதேநேரம், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் ஞானவேலுவின் உடலையும், ஆபத்தான நிலையில் இருந்த ரகுவையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை அடுத்து குடியாத்தம் கிராமிய காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று பூவரசனை பலத்த பாதுகாப்புடன் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சேங்குன்றம் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவியதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரகுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை வழக்கு தொடர்பாக குடியாத்தம் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு: கைது செய்யப்பட்ட பூவரசன் நாட்டு துப்பாக்கியை சேங்குன்றம் கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் பதுக்கி வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்ய இன்ஸ்பெக்டர்கள் தமிழ்செல்வன் (குடியாத்தம் கிராமியம்), பிரபு (பேரணாம்பட்டு) ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று காலை அவரை பலத்த பாதுகாப்புடன் சேங்குன்றம் மலையடிவாரத்துக்கு அழைத்துச் சென்றனர்.
நாட்டு துப்பாக்கியை எடுத்து கொடுத்த பூவரசன், அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியால் எஸ்.ஐ ராஜாவை தாக்கிவிட்டு மலைப்பகுதிக்கு தப்பி ஓட முயன்றார். இதையடுத்து எஸ்.ஐ ராஜா, பூவரசனை தனது துப்பாக்கியால் சுட்டார். படுகாயம் அடைந்த பூவரசனையும், எஸ்.ஐ ராஜாவையும் போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து இருவரையும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.