

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே போலீஸாரை நாட்டு துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடியை, போலீஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
தூத்துக்குடி மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்க் என்ற மரிய அந்தோனி (35). இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட சுமார் 30 வழக்குகள் உள்ளன. இவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் திருச்செந்தூர் அருகே உள்ள சோனகன்விளை காணியாளன்புதூரில் ஒரு வீட்டில் மரிய அந்தோனி தங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளர் ராஜ பிரபு தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று மதியம் காணியாளன்புதூரில் உள்ள வீட்டில் இருந்த மரிய அந்தோனியை பிடிக்க முயன்றனர்.
அப்போது, அவர் தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கியால் உதவி ஆய்வாளர் ராஜ பிரபுவை சுட்டுவிட்டு தப்பித்து ஓட முயன்றுள்ளார். உடனே உஷாரான உதவி ஆய்வாளர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதில் மரிய அந்தோனியின் வலது மார்புக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் குண்டு பாய்ந்தது.
இதனால் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். போலீஸார் அவரை உடனடியாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மரிய அந்தோனி நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் ராஜ பிரபுவும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை எஸ்.பி.மதன் பார்த்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்ததாவது: மரிய அந்தோனி மீது சுமார் 30 வழக்குகள் உள்ளன. தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் அவர் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்தார். இந்த வழக்கு தொடர்பாக அவரை பிடிக்க முயன்ற போது தான் நாட்டு துப்பாக்கியால் எஸ்ஐ ராஜபிரபுவை மரிய அந்தோணி சுட்டுவிட்டு தப்பியோட முயன்றார்.
இதை தொடர்ந்து தனது உயிரை பாதுகாக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு எஸ்ஐ தனது துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டுள்ளார். இது தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.