

பாலியல் வழக்கில் சிக்கிய வானூர் திமுக ஒன்றிய செயலாளரை கைது செய்யக்கோரி விழுப்புரத்தில் மெகுழுவர்த்தி ஏந்தி மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலை மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
விழுப்புரம்: வானூர் ஒன்றிய திமுக செயலாளர் பாஸ்கரன், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு இதுவரையில் அவர் கைது செய்யப்படவில்லை.
இதற்கிடையில், இவ்வழக்கு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாஸ்கரன் மீது பெண் கொடுத்த பாலியல் புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடைபெறுகிறது.
வாதியும், குற்றஞ்சாட்டப்பட்டவரும் பேசிய உரையாடல் பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இருவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில், புகாரில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் முரண்பாடுகள் உள்ளது தெரிய வருகிறது.
இவ்வழக்கில் போதுமான சாட்சியங்களை சேகரிக்க வேண்டும் என்பதால், தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கைது செய்யவும் அல்லது பிற நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
நியாயமான விசாரணை நடைபெறும் நிலையில், புலன் விசாரணையில் உள்ள வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு மற்றும் விசாரணையின் போக்கை பாதிக்கும் வகையில் தவறான தகவல் பரப்புவதை தவிர்க்கமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஒன்றிய செயலாளர் மீதான வழக்கில் காவல்துறை வெளியிட்டிருக்கும் திடீர் அறிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இதேபோன்று, சமானிய நபர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டால், புகாரை உறுதி செய்த பிறகுதான் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறதா? இதேபோன்ற அறிக்கையை அனைத்து வழக்கிலும் காவல்துறை வெளியிடுமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கும் காவல்துறை, தற்போது அவதூறு பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதாக கூறி இருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.