

ஜல்லிக்கட்டு அரங்கில் காளைகள் அழைத்து வரப்படும் இடத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் பணியாளர்கள்.
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள வெளிநாட்டு வீரர்களுக்காக மதுரை கீழக்கரை கலைஞர் ஜல்லிக்கட்டு அரங்கில் ஜல்லிக்கட்டுப் போட்டி டிச.5-ம் தேதி நடக்கிறது.
இந்தப் போட்டியை பார்க்க வீரர்கள் மாட்டு வண்டிகளில் தமிழர் பாரம்பரிய உடைகளுடன் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் சுமார் 66.8 ஏக்கர் பரப்பரளவில் கிரிக்கெட் மைதானம் போன்று முதல் முறையாக ஜல்லிக்கட்டுக்கு பிரம்மாண்ட அரங்கம் கட்டப்பட்டது.
இந்த அரங்கில் ஆண்டுதோறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகள் முடிந்த பிறகு சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சர்வதேச ஜூனியர் ஹாக்கி போட்டி இன்று தொடங்க உள்ளது.
இந்தப் போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள வெளிநாட்டு ஹாக்கி அணி வீரர்களுக்காக, மதுரையின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி டிச.5-ம் தேதி கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடக்கிறது. இதற்காக அந்த மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து ஜல்லிக்கட்டு அரங்கின் மேலாளர் விக்கேஷ் கூறியது: சர்வதேச ஹாக்கி வீரர்களுக்கு மதுரையின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் 50 மாடுகள் பங்கேற்கும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிக்கு காளைகளை அழைத்து வரவும், மாடுபிடி வீரர்களை ஆயத்தப்படுத்தவும் ஜல்லிக்கட்டு கமிட்டியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைதானம் சுத்தப்படுத்தும் பணி நிறைவு பெற்றதும் பொதுப்பணித்துறை மூலம் காளைகள் கொண்டுவரப்படும் இடத்தில் உள்ள உடைந்த பாதுகாப்பு கம்பிகளை சரிசெய்யும் பணி நடைபெற உள்ளது.
மாடுபிடி பகுதியில் போடப்பட்டுள்ள பழைய தேங்காய் நார் கழிவுகள் அகற்றப்பட்டு, புதிதாக போடப்படவுள்ளன. டிச.5-ம் தேதி இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டை காண வரும் ஹாக்கி வீரர்களை வரவேற்க 15 மாட்டு வண்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
ஹாக்கி வீரர்கள் நமது சிறப்பு விருந்தினர்களாக தமிழர் பாரம்பரிய உடையுடன் மாட்டு வண்டிகளில் அரங்குக்கு அழைத்து வரப்படுவர். இப்போட்டிகளை பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.