

சென்னை: வேலூர் மேல்விஷாரத்தை அடுத்த கீழ்விஷாரம் பகுதியில் கடந்த 14-ம் தேதி வேலூர் இப்ராஹிம் தலைமையில் பாஜக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மாநிலச் செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற சில நாட்களிலேயே, அவருக்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
அதில், “முஸ்லிம்கள் எப்போதும்பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்ற அமர்பிரசாத் ரெட்டி, பிரதமர் மோடியை ஆதரித்துப் பேசினார். எங்கள் சமூகத்துக்கு எதிராக பேச யாரையும் அனுமதிக்க மாட்டோம்.
கணிக்க முடியாத நேரத்தில் அவரது இல்லத்தில் 2 கிலோ ஆர்டிஎக்ஸை வைப்போம். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பேச அனுமதி அளித்த போலீஸாருக்கு இது ஒரு சவால்.
உங்களால் முடிந்தால், அமர் பிரசாத் ரெட்டியை காப்பாற்ற முயற்சிக்கவும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வேலூர் இப்ராஹிமிடம் கேட்டபோது, “மக்களிடையே நாங்கள் கொண்டு செல்லும் கருத்துகளை பொறுத்துக்கொள்ள முடியாத சில சக்திகள், எனக்கும் அமர்பிரசாத் ரெட்டிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளன. இதுபோன்ற மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. இந்த மிரட்டல்கள் குறித்து விரைவில் டிஜிபி-யிடம் புகார் அளிக்க உள்ளோம்” என்றார்.