

சென்னை: சென்னை சவுக்கார்பேட்டை மின்ட் தெருவில் 200-க்கும் மேற்பட்ட சில்வர் பாத்திரத் தயாரிப்பு மற்றும் மொத்த விற்பனைக் கடைகள் இயங்கி வருகின்றன.
இங்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்வது வழக்கம். நேற்று முன்தினம் மாலை, ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் நிஷாந்த் தலைமையிலான ஆய்வாளர்கள் அஜீஸ் மற்றும் சுஷில் ஆகியோர் மின்ட் தெருவில் உள்ள மகிபால் ஸ்டெயின்லெஸ் என்ற கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தகவலறிந்த ஸ்டீல் மார்க்கெட் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 300 வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்கள் உடனடியாக அங்கு திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இந்த ஆய்வு நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், ஜிஎஸ்டி உயரதிகாரிகள் நேரில் வந்து இதற்கான விளக்கத்தை அளிக்கும் வரை, அதிகாரிகளை வெளியில் அனுப்ப முடியாது என்று கூறி அவர்களை சிறைப்பிடித்தனர்.
வியாபாரிகளின் இந்த திடீர் எதிர்ப்பால், அதிகாரிகள் கடைக்குள்ளேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் சென்னை யானைக்கவுனி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பூக்கடை துணை ஆணையர் தலைமையிலான யானைக்கவுனி போலீஸார், வியாபாரிகள், சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு, அதிகாரிகளை மீட்டு போலீஸார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
5 பிரிவுகளின் கீழ் வழக்கு
இந்நிலையில், தங்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் நிஷாந்த் அளித்த புகாரின் பேரில், யானைக்கவுனி போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்கள் 6 பேரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜிஎஸ்டி அதிகாரிகளின் தொடர் ஆய்வுக்கும், சக வியாபாரிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று சவுக்கார்பேட்டை மின்ட் தெருவை சுற்றியுள்ள 1,000-க்கும் மேற்பட்ட சில்வர் பாத்திரக் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. வியாபாரிகளின் இந்த திடீர் கதவடைப்பு போராட்டத்தால் சவுக்கார்பேட்டை பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.