

வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்தவர் செந்தில். பஞ்சு மெத்தை தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி லலிதாம்பிகை. கடந்த 2021-ம் ஆண்டு செந்திலுக்கு இதயக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
அவருக்கு இதயத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதால், அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் தினேஷ் சண்முக சுந்தரத்தை குடும்பத்தினர் அணுகியுள்ளனர். தொடர்ந்து இதய வால்வு அறுவை சிகிச்சைக்காக, மருத்துவர் தினேஷ் சண்முக சுந்தரம் ஆலோசனையின் பேரில் மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செந்தில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அறுவை சிகிச்சைக்கு ரூ.4 லட்சம் செலவாகும் என்று கூறி, காப்பீடு திட்டம் மூலம் பெறப்பட்டது போக, மீதமுள்ள ரூ.2 லட்சத்தை ரொக்கமாகப் பெற்றுக்கொண்ட மருத்துவர், அதற்கு எந்த வித ரசீதும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் ஏப்.13-ம் தேதி செந்திலுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அறுவை சிகிச்சைக்குப் பின் செந்திலின் உடல் நிலை மோசமடைந்தது. இதுகுறித்து குடும்பத்தினர் தொடர்பு கொண்டும் மருத்துவர் உரிய விதத்தில் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
முறையான கண்காணிப்பு மற்றும் தொடர் சிகிச்சை இல்லாத காரணத்தால், செந்திலுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு, ஏப்.22-ம் தேதி உயிரிழந்தார். கணவரின் உயிரிழப்புக்குக் காரணமான மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மனைவி லலிதாம்பிகை, 2021 அக்டோபர் மாதம் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியது. அதன் பேரில் அசோக் நகர் போலீஸார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவர் தினேஷ் சண்முக சுந்தரம் மீது தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.