

சென்னை: பெண் காவலரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பின்னர் திருமணம் செய்ய மறுத்த புகாரில், காவலர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த அஜய் ஆகாஷ் (26) திருச்சி பட்டாலியனில் காவலராகப் பணியாற்றுகிறார். இவருக்கும், சென்னையில் பணியாற்றும் பெண் காவலருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவரையே திருமணம் செய்வதாக அஜய் ஆகாஷ் உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் 2025 முதல் எழும்பூர் காவலர் குடியிருப்பில் ஒரே வீட்டில் கணவன் - மனைவி போல வசித்து வந்துள்ளனர்.
பின்னர், பெண் காவலர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தன் வீட்டார் பேச்சைக் கேட்டு திருமணத்துக்கு அஜய் ஆகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். அவருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பெண் காவலர் கடந்த ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், எழும்பூர் மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இதை அறிந்து அஜய் ஆகாஷ் தலை மறைவானார். இந்நிலையில், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அஜய் ஆகாஷ் 26-ம் தேதி சரணடைந்தார். அப்போது, பெண் காவலர் தன்னிடமிருந்த ஆதாரங்களை நீதிபதி செந்தில்குமாரிடம் சமர்ப்பித்தார்.
இதையடுத்து, அஜய் ஆகாஷை டிச.10 வரை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். போலீஸார் அவரை கைது செய்தனர்.