கோவையில் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் துணிகர கொள்ளை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸ்!

கோவையில் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் துணிகர கொள்ளை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸ்!
Updated on
2 min read

கோவை: கோவையில் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் நடந்த துணிகரக் கொள்ளையில் தொடர்புடைய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு 2000-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் அரசுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (நவ.28) மாலை பணிக்குச் சென்றிருந்த அரசு ஊழியர் ஒருவர் வீடு திரும்பியபோது, அவரது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அவரது வீடு போலவே அடுத்தடுத்து 13 வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

அதில் ஒருவர் வீட்டில் 30 பவுன் நகை திருடு போயிருந்தது. ஒட்டுமொத்தமாக 13 வீடுகளின் சேர்த்து 56 பவுன் நகை, 3 லட்சம் பணம், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருடு போயிருந்தன. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவர்கள் வீட்டு பூட்டை உடைத்து திருடிவிட்டு அடுத்தடுத்த வீடுகளிலும் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த கவுண்டம்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். இந்த வழக்குகளில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்க காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கவுண்டம்பாளையம், துடியலூர், சரவணம்பட்டி ஆகிய காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த மூன்று தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக குடியிருப்பு பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் அடையாளங்களை சேகரித்தினர்.

அதேபோல் செல்போன் தொழில்நுட்பங்கள் மூலமாகவும் போலீஸார் விசாரித்தனர். அதன் இறுதியில் இங்கு கொள்ளையடித்த நபர்கள் கோவை குனியமுத்தூர் அருகே பிகே புதூரில் இருந்து குளத்துப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள திருநகர் காலனியில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு இன்று (நவ.29) காலை தகவல் கிடைத்தது .போலீஸார் அங்கு சென்றனர். அவர்கள் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். மர்ம நபர்களை வீட்டிலிருந்து வெளியே வருமாறு போலீஸார் வலியுறுத்தினர்.

அப்போது அவர்கள் மூவரும் தங்களது கையில் இருந்த அரிவாளால் போலீஸாரை நோக்கி மிரட்டினர். அங்கிருந்த காவலர் பார்த்திபன் என்பவரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றனர். இதை அடுத்து போலீஸார் தங்களிடம் இருந்து துப்பாக்கியால் மர்மநபர்கள் மூவரின் கால்களில் சுட்டுப்பிடித்தனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இர்பான்( 43), கல்லு ஆரிப் (60 ), ஆசிப்(45) எனத் தெரிந்தது. மூவருக்கும் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் மேற்கண்ட இடத்தில் பகல் நேரத்தில் வந்து நோட்டமிட்டு திருடிச் சென்றது தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் .

கோவையில் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் துணிகர கொள்ளை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸ்!
‘தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக எங்கள் எம்.பி.க்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்’ - முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in