

சென்னை: வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளிடம் ஒன்றிய பாஜக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா என தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (29-11-2025) காலை 10.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தின் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பாஜக அரசு புறக்கணிப்பது சரியா?
தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல.
அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்.
வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளிடம் ஒன்றிய பாஜக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று காலை மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தை வஞ்சிப்பதாக மத்திய அரசுக்கு கண்டனம் உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.