

வேதநாராயணன்
சென்னை: ரூ.828 கோடி மோசடி வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட எல்என்எஸ் நிதி நிறுவன நிர்வாகி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
வேலூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த எல்என்எஸ் இன்டர்நேஷ்னல் ஃபைனான்சியல் சர்வீஸ் என்ற நிதி நிறுவனம் 5,322 பேரிடம் சுமார் ரூ.828 கோடி மோசடி செய்தது.
பணத்தை இழந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2022-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து அந்நிறுவனம் தொடர்புடைய 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், ரூ.1.16 கோடி ரொக்கம், 90 பவுன் நகை, ரூ.40 லட்சம் வெள்ளிப் பொருட்கள், ரூ.6 கோடி மதிப்புள்ள 26 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மோகன்பாபு, லட்சுமி நாராயணன், வேதநாராயணன், ஜனார்த்தனன் ஆகிய 4 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வேதநாராயணன், துபாயில் இருந்து சென்னை வந்தார். அவரது பாஸ்போர்ட், விசாக்களை ஆய்வு செய்த குடியுரிமைத்துறை அதிகாரிகளுக்கு, அவருக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவினரின் ரெட் கார்னர் நோட்டீஸ் இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, வேதநாராயணனை கைது செய்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.