

சென்னை: மேற்கு தாம்பரம், கன்னடபாளையத்தில் உள்ள மருந்து நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வருபவர் அந்தோணி அகஸ்டின் (33).
இவர் கடந்த செப். 24-ம் தேதி இரவு, பாரிமுனைக்குச் சென்று நிறுவனத்தின் வசூல் பணமான ரூ.24 லட்சத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு பைக்கில் நிறுவனத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அடையாறு, சர்தார் வல்லபாய் படேல் சாலையில் உள்ள அம்பிகா அப்பளம் சிக்னலைக் கடந்தபோது, 3 பைக்குகளில் வந்த 6 பேர், அந்தோணி அகஸ்டினின் வாகனத்தை வழிமறித்து, அவரைத் தாக்கி கீழே தள்ளியதுடன், கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.24 லட்சம் பணப் பையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அந்தோணி அகஸ்டின் அளித்த புகாரின்பேரில், அடையாறு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல் கட்டமாக கொள்ளை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சென்னை, தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகரைச் சேர்ந்த பாபுவை (28) நேற்று முன்தினம் கைது செய்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், பாபு தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதும், கொள்ளையடித்த பணத்தைப் பங்கிட்டு ஆடம்பர செலவு செய்ததும் தெரியவந்தது.
மேலும், பாபு மீது ஏற்கெனவே 5 குற்ற வழக்குகள் இருப்பதும், அவர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய சரித்திரப் பதிவேடு
குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இந்தக் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.