

நிலத்தரகர் ஜெயபிரகாஷ் (இடது), அவரது வீடு (வலது)
பழநி: பழநியில் ரூ.100 கோடி நிலப்பதிவு முறைகேடு தொடர்பாக, தலைமறைவாக உள்ள நிலத்தரகர் ஜெயபிரகாஷ் வீட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் சோதனை நடைபெற்ற நிலையில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய சிபிசிஐடி போலீஸார் வீட்டிற்கு சீல் வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் சட்ட விரோதமாக ரூ.2 கோடிக்கு தனி நபர்களுக்கு கடந்த ஜூலை 6-ம் தேதி பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 84 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில் 11 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது வரை அறக்கட்டளையை சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் 4 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்துள்ள சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்த முறைகேட்டில் தொடர்புடைய ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த நிலத்தரகர் ஜெயபிரகாஷ் (தலைமறைவாக உள்ளார்) வீட்டில் இன்று (ஆக.6) காலை முதல் 4 மணி நேரத்துக்கும் மேலாக சிபிசஐடி போலீஸார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், வீட்டிற்கு சீல் வைத்தனர். மேலும், ஜெயபிரகாஷின் மனைவியை திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஜெயபிரகாஷ் வீட்டை தொடர்ந்து, நிலம் முறைகேட்டிற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்து கொடுத்த வழக்கறிஞர் சிவக்குமார் வீட்டிலும் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இவரும் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பத்திரப்பதிவு பணியை மேற்கொண்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நேற்று ரத்து செய்துள்ள நிலையில் அவரையும் கைது செய்யும் முயற்சியில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.