

பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரண மாத்திரைகளுடன் நாகேஸ்வரன்
ராமேசுவரம்: மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கடல்சார் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடல்சார் காவல்துறை இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மண்டபம் நோக்கி வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 7.50 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து வாகனத்தை ஒட்டி வந்த நாகேஸ்வரனிடம் கடல்சார் காவல்துறை நடத்திய விசாரணையில் வலி நிவாரணி மாத்திரை அனைத்தும் வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, சரக்கு வாகனத்துடன், 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸார் ஓட்டுநர் நாகேஸ்வரனை கைது செய்து மண்டபம் கடல்சார் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் சரக்கு வாகனம் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளையும், நாகேஸ்வரனையும் கடல்சார் காவல்துறையினர், மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரண மாத்திரைகளின் மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.