

கோப்புப் படம்
புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக இலங்கைக்கு மருந்து கடத்தப்பட்டதும் தெரியவந்தது.
புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை நடத்தி நாடு முழுவதும் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டது சில மாதங்கள் முன்பு தெரியவந்தது. டெல்லியில் உள்ள பிரபல நிறுவனம் அளித்த புகாரின்பேரில் புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் ராஜா உட்பட 25-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
மேலும், மருந்து தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மருந்துகளை கைப்பற்றி, குடோன்களுக்கு சீல் வைத்தனர். உரிமையாளர் வீட்டில் இருந்து நகை, பணம், சொத்து பத்திரங்களையும் போலீஸார் கைப்பற்றினர்.
பல மாநிலங்களுக்கும் தொடர்பு இருந்ததால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்தார். இதையடுத்து, இவ்வழக்கை சிபிஐ-க்கு மத்திய உள்துறை மாற்றியது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதிதாக மீண்டும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு படகை சோதனையிட்டபோது, அதில் சட்டவிரோதமாக மருந்துகள் இலங்கைக்கு கடத்திக் கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர் விசாரணையின் அடிப்படையில், இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தை தொடர்புகொண்டனர்.
ஆனால், அவர்கள் இலங்கைக்கு எந்த மருந்தையும் தாங்கள் அனுப்பவில்லை என்றும், அந்த மருந்து தங்களின் தயாரிப்பு இல்லை என்றும் கூறியுள்ளனர். அவர்களின் தொடர் விசாரணையில், புதுவை மேட்டுப்பாளையம் குருமாம்பேட்டில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்று, வலி நிவாரணி மாத்திரைகளை போலியாக தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து புதுவை போலீஸாருக்கு கடலோர காவல் படையினர் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் புதுவை போலீஸார், மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழிற்சாலையில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் 3 லட்சம் போலி வலி நிவாரணி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு வைத்திருந்ததை கண்டறிந்தனர். அவற்றை கைப்பற்றிய போலீஸார், போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளரான சண்முகாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கைது செய்தனர். இவர், மேட்டுப்பாளையத்தில் 10 ஆண்டுக்கும் மேலாக மருந்து தொழிற்சாலை நடத்தி வருவதும், இந்த நிறுவனத்தில் மேலும் சில மருந்துகள் தயாரிக்கப்படுவதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "இங்கு தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு அனுமதி உள்ளதா? போலியாக தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்தி வருகிறோம். போலி வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு மட்டும் அனுப்பிவைக்கப்பட்டதா? வேறு மாநிலங்கள் அல்லது வேறு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா எனவும் விசாரணை நடைபெறுகிறது. புதுவையில் கைப்பற்றப்பட்ட மருந்துகளை, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்” என்றனர்.