நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.7,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் விற்பனை

உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.7,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் விற்பனை
Updated on
2 min read

மதுரை: நியோ மேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.7,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் விற்பனைக்கு தயாராக இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையைத் தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாகவும் முதலீடு முதிர்வு காலத்தில் பல மடங்கு அதிகமாக திருப்பித் தரப்படும் என பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டன.

இந்த வழக்கை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர். மோசடியில் ஈடுபட்டு, ஜாமீனில் உள்ள இயக்குநர்கள் நீதிமன்ற உத்தரவுகளை மீறி செயல்படுவதால், அவர்களின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை நீதிபதி பரத சக்கரவர்த்தி தொடர்ந்து விசாரித்து வருகிறார்.

கடந்த வார விசாரணையின் போது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை பொது ஏலம் விடுவதற்கு அனுமதி வழங்கியும், அதற்கான ஆன்லைன் பதிவு முகவரி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், “நியோ மேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.7 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை 4 வகைகளாக பிரித்து விற்பனைக்கு தயார் செய்யப்பட்டுள்ளது.

அரசு அனுமதி பெற்ற நிலங்கள், அரசு அனுமதிக்காக விண்ணப்பிக்க பட்ட நிலங்கள், அரசு அனுமதி பெறாமல் வாங்கி வைக்கப்பட்டுள்ள நிலங்கள், அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் என நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. நிலங்களை வாங்குவதற்கு ஆன்லைன் பதிவு கட்டணமாக 1,000 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது. மற்றபடி எந்த கட்டணமும் கிடையாது.” என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “கடந்த ஒரு வார காலமாக எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் ? அதில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை நபர் ? தனி நபர்கள் எத்தனை ? என மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, பாதிக்கப்பட்ட நபர்கள் 60 பேர் மட்டுமே இதுவரை விண்ணப்பித்துள்ளனர். தனிநபர்கள் 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்” என்று மத்திய அரசு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதி, “இந்த திட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் பதிவு எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எதையும் கடைசி நேரத்தில் எதிர்கொள்ளலாம் என உள்ளது. இது தவறான முன்னுதாரணம். இதுவரை 60 நபர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர் என்பது வருத்தம் அளிக்கிறது.

எனவே நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள் அரசின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சென்றடைந்ததா ? எனத் தெரியவில்லை. பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இது குறித்து நடவடிக்கை எடுத்தார்களா? என்பது தெரியவில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் சென்றடையும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.7,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் விற்பனை
இந்தியாவில் அவசர கால தேவைக்காக கச்சா எண்ணெய் சேமிக்க பூமிக்கடியில் 3 குகைகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in