

பிரதிநிதித்துவப் படம்
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் தனது 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 43 வயது மரம் வெட்டும் தொழிலாளிக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், 2-வது மனைவியுடன் அவர் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய 15 வயது மூத்த மகள், தாயார் கூலி வேலைக்குச் சென்ற பிறகு வீட்டு வேலைகளை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத தனிமையைப் பயன்படுத்தி கொண்ட தந்தை, தனது மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, இன்ஸ்பெக்டர்கள் சிவகலை மற்றும் கவுரி மனோகரி ஆகியோர் வழக்கை விசாரித்தனர். ஏடிஎஸ்பி சண்முகம் மற்றும் டிஎஸ்பி தர்ஷிகா ஆகியோரின் மேற்பார்வையில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.
இந்த குற்றத்தை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க, சிசுவின் டிஎன்ஏ மாதிரியும், தந்தையின் டிஎன்ஏ மாதிரியும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அக்டோபர் மாதம் வெளியான அந்த ஆய்வு முடிவில், சிறுமியின் கர்ப்பத்துக்கு அவரது தந்தைதான் 100 சதவீதம் காரணம் என்பது உறுதியானது. இந்த ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஷா, பெற்ற மகளையே சிதைத்த குற்றவாளிக்கு எவ்வித கருணையும் காட்டக் கூடாது என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் இன்று தீர்ப்பு கூறினார். அப்போது குற்றவாளி கூண்டில் நின்றிருந்த தந்தையை நோக்கி நீதிபதி கூறும்போது, ‘இந்த நீதிமன்றம் உங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க நினைத்தாலும், உங்களது மனைவியும், பாதிக்கப்பட்ட குழந்தையும் உங்களுக்கு உச்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என எழுத்துபூர்வமாகக் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
சொந்த மகளையே ஒரு தந்தை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்வது எவ்விதத்திலும் ஏற்க முடியாத கொடூரமான செயல். எனவே, இந்த நீதிமன்றம் உங்களுக்கு மரண தண்டனை விதிக்கிறது’ என்று தீர்ப்பு கூறினார்.
11 நாட்களில் 2-வது மரண தண்டனை: திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 11 நாட்களுக்கு முன்புதான், தனது மகளையே கர்ப்பமாக்கிய மற்றொரு தந்தைக்கு நீதிபதி சுரேஷ்குமார் மரண தண்டனை விதித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு வழக்கில் தந்தை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.