

புதுடெல்லி: நீட் யுஜி வினாத்தாள் கசிவு வழக்கில் மருத்துவர் மற்றும் இயற்பியல் ஆசிரியர் என மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் யுஜி வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து, 23 லட்சம் மாணவர்கள் எழுதிய அந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. இதற்கான மறுதேர்வு வரும் ஜூன் 21-ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் பணம் கைமாறிய இந்த வினாத் தாள் மோசடி குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் லத்தூரைச் சேர்ந்த மருத்துவர் மனோஜ் ஷிரூரே, புனேயில் உள்ள பயிற்சி மையத்தின் இயற்பியல் ஆசிரியர் தேஜஸ் ஹர்ஷத் குமார் ஷா ஆகிய 2 பேரை கைது செய்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
வினாத்தாள் தயாரிப்பாளரிடமிருந்து வேதியியல் கேள்விகளைப் பெற்று மாணவர்களுக்குக் கொடுத்ததாக ஷிரூரே மீதும், மற்றொரு குற்றவாளியிடமிருந்து கசிந்த இயற்பியல் கேள்விகளைப் பெற்றதாக ஷா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்களையும் சேர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந்த மோசடி வலையமைப்பை முழுமையாகக் கண்டறிய சிபிஐ இதுவரை 49 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.