

சென்னை: கொலைக்கு பழிக்குப் பழியாக நடந்த மற்றொரு கொலை வழக்கில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியின் கூட்டாளிகள் 7 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ரவுடி சத்யா (27).
இவர், கடந்த 10-ம் தேதி இரவு எண்ணூரில் இருந்து கண்ணகி நகருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கொலை செய்துவிட்டு தப்பியது.
இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்தனர். கொலையில் தொடர்புடைய புதுச்சேரியை சேர்ந்த விக்கி (27), எண்ணூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவரை பிடிக்க முயன்றபோது போலீஸாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார்.
இதையடுத்து, போலீஸார் விக்கியின் காலில் சுட்டுப் பிடித்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து சத்யா கொலை வழக்கில் தொடர்புடைய எண்ணூரை சேர்ந்த அசோக்பிரசாத் (21), சூர்யா (19), செல்வா என்ற செல்வராஜ் (20), குறளரசன் (21), சுபாஷ் (25), வடிவேல் (23), வினோத் என்ற மூணு வினோத் (24) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
2023-ம் ஆண்டு, எண்ணூர் சுனாமி குடியிருப்பில் நடந்த கோயில் திருவிழாவின்போது, சத்யா அவரது நண்பர்களுடன் சேர்ந்து, பொய் விஜய் என்பவரை கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக எண்ணூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிணையில் சத்யா வெளியே வந்தபோது, பொய் விஜயின் நண்பர்களான விக்கி உள்ளிட்டோர் அவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.