

உயிரிழந்த தாய் தேவி, மகள் சுவாதி.
ஊரப்பாக்கம்: அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற ஸ்கூட்டர் மீது எதிரே வந்த தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில், தாய், மகள் உயிரிழந்தனர்.
ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி(23). இருவரும் நேற்று காலை 8 மணியளவில் ஸ்கூட்டரில் வீட்டிலிருந்து ஊரப்பாக்கம் நோக்கி புறப்பட்டனர்.
சுவாதி ஸ்கூட்டரை ஓட்டினார். காரணை புதுச்சேரி கிராமம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற அரசுப் பேருந்தை சுவாதி முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த தனியார் மெட்ரிக் பள்ளிப் பேருந்து, ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியது.
இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட தேவி, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சுவாதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து நடந்தபோது பள்ளிப் பேருந்தில் மாணவர்கள் யாரும் இல்லை. ஓட்டுநர், நடத்துநர் மட்டுமே இருந்தனர்.
தகவலறிந்த கூடுவாஞ்சேரி தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். வழக்குப் பதிவு செய்து பள்ளிப் பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.