

சென்னை: பிரேக் பழுதடைந்த மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதிய விபத்தில், சென்னை உயர் நீதிமன்றம் எதிரே உள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.
செங்கல்பட்டு மாவட்டம், ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து சென்னை தீவுத்திடல் நோக்கி மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்து வந்து கொண்டிருந்தது.
உயர் நீதிமன்றத்தின் அருகே வந்தபோது, பேருந்தின் பிரேக் பழுதடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்து என்.எஸ்.சி. போஸ் சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், 10-க்கும் மேற்பட்ட கார்கள் பலத்த சேதமடைந்தன. கார்கள் மீது மோதிய வேகத்தில் பேருந்து சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியன் மீது ஏறி நின்றது. இந்த விபத்து காரணமாக என்.எஸ்.சி. போஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த விபத்து காரணமாக போர் நினைவுச் சின்னம் அருகே தடுப்புகளை அமைத்து, போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பேருந்து ஓட்டுநர் ராமமூர்த்தி, நடத்துநர் தேவராஜ் ஆகியோரிடம் விபத்து குறித்து வடக்கு கடற்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சென்னை உயர் நீதிமன்ற பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.