

மதூர் சத்யா | கோப்புப் படம்
சென்னை: பாலியல் புகாரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யாவை போலீஸார் கைது செய்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் மதூர் சத்யா. இவர் சமூக வலைதளங்கள், ஊடக விவாதங்கள் மற்றும் யூடியூப் சேனல் நேர்காணலில் கலந்து கொண்டு தன்னுடைய அரசியல் கருத்துகளைப் பேசி பிரபலம் அடைந்தவர்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புகளான அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் நட்புச் சங்கம் ஆகியவற்றில் தீவிரமாக இயங்கி வந்தார்.
இந்நிலையில், அவர் மீது கடந்த 13-ம் தேதி பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. குறிப்பாக பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அதே கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர், கட்சி நிர்வாகிகளுக்கு இ-மெயில் அனுப்பினார். அந்தப் புகார்களை விசாரித்த கட்சி நிர்வாகிகள், மதூர் சத்யா வகித்து வந்த பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கினர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டம் நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 15-ம் தேதி புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்தனர். இதில் மதூர் சத்யா மீது அளிக்கப்பட்ட புகார் உண்மை எனத் தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், சேலத்தில் இருந்த அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.