திருமண ஆசை காட்டி ரூ.15 லட்சம் மோசடி - துணை ராணுவப்படை பெண் வீரர் உட்பட மூவர் கைது

திருமண ஆசை காட்டி ரூ.15 லட்சம் மோசடி - துணை ராணுவப்படை பெண் வீரர் உட்பட மூவர் கைது
Updated on: 
1 min read

திருவாரூர்: திருவாரூர் அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.15 லட்சத்து 37 ஆயிரம் பணத்தை மோசடி செய்த துணை ராணுவப்படை பெண் வீரர் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தென்னவராயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (36). இவர் வெளிநாட்டில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி தற்பொழுது ஊர் திரும்பியுள்ளார். இவருக்கும் இவருடைய தூரத்து உறவினரான திருவாரூர் அருகே அகரத்திருநல்லூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருடைய மகள் செமிலா (29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

செமிலா, மத்திய ரிசர் காவல் துறையில் காவலராக கோவை பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். ராஜமாணிக்கம் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பொழுது, செமிலா மற்றும் அவருடைய சகோதரர் கோகுல்ராஜ் மற்றும் தாய் சசிகலா உள்ளிட்டோர் வங்கி கணக்கில் சிறுக சிறுக 15 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், செமிலாவுக்கு மத்திய ரிசர்வ் காவல்துறையில் பணியாற்றும் மற்றொரு காவலருடன் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து, மூன்று மாதத்திற்கு முன்னர் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி செமிலா மற்றும் அவரது குடும்பத்தினர் 15 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பறித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் ராஜமாணிக்கம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், திருவாரூர் தாலுகா காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ராஜமாணிக்கம் ஏமாற்றப்பட்டது உண்மை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து செமிலா மற்றும் அவரது தாய் சசிகலா மற்றும் அவருடைய சகோதரர் கோகுல்ராஜ் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர்.

மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறையினர் தாய் சசிகலாவை திருவாரூர் சிறையிலும் சகோதரர் கோகுல் ராஜை நாகப்பட்டினம் சிறையிலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், செமிலாவிற்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட மத்திய ரிசர்வ் படை பெண் காவலர் உட்பட குடும்பத்தினர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமண ஆசை காட்டி ரூ.15 லட்சம் மோசடி - துணை ராணுவப்படை பெண் வீரர் உட்பட மூவர் கைது
புதுச்சேரி பேரவை முற்றுகை - பேச்சுவார்த்தை நடத்த வந்த சபாநாயகருடன் எம்எல்ஏ நேரு வாக்குவாதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in