

பெங்களூரு: பெங்களூருவில் பெண் பொறியாளர் ஒருவரிடம் தொழிலதிபரை போல நடித்து திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ரூ.1.53 கோடி ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடிக்கு அந்த நபரின் தந்தை, மனைவி, நண்பர்களும் உடந்தையாக இருந்தது அம்பலமாகியுள்ளது.
பெங்களூருவில் உள்ள அஞ்சேபாளையாவைச் சேர்ந்த 29 வயது பெண் பொறியாளர். கெங்கேரி காவல் நிலையத்தில் கடந்த 16-ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருந்ததாவது: கடந்த 2024 மார்ச் மாதம் திருமண வலைத்தளம் வாயிலாக பெங்களூருவைச் சேர்ந்த விஜய் ராஜ் கவுடா (34) எனக்கு அறிமுகமானார். என்னை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்த அவர், தன்னை வி.ஆர்.ஜி. நிறுவனத்தின் உரிமையாளர் என கூறினார்.
மேலும் அமலாக்கத்துறை அவரது நிறுவனத்தின் ரூ.715 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி வைத்திருப்பதாகக் கூறி, அதற்கான ஆவணங்களை போலியாக தயாரித்து என்னிடம் காட்டினார்.என்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறியதால்,அவருடன் நெருங்கி பழகியதுடன் அவர் கேட்கும் போதெல்லாம் ரூ.1.75 கோடி வரை கொடுத்தேன்.
அதில் ரூ.22 லட்சத்தை திரும்பக் கொடுத்து விட்டார். மீதமுள்ள 1.53 கோடி தரவில்லை. இவ்வாறு பணம் கொடுக்கல் வாங்கலில் எனக்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவருக்கு திருமணமானது தெரியவந்தது. மனைவி சவுமியாவை தனது சகோதரி என எனக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார். அவரது இந்த மோசடிக்கு மனைவி சவுமியா, தந்தை போரே கவுடா, நண்பர்கள் அஷ்வின் கவுடா, ரமேஷ் கவுடா உடந்தையாக இருந்தனர்.
இந்த பணத்தையும் மோசடி யையும் கண்டித்ததால் விஜய் ராஜ் கவுடா எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் எனது பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இதுகுறித்து கெங்கேரி போலீஸார் வழக்கு பதிந்து, தலைமறைவான விஜய் ராஜ் கவுடா உள்ளிட்ட 5 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.