

சம்பத்
சென்னை: ஆடு விற்ற பணம் ரூ.15 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிவிட்டதாக முதலாளியிடம் நாடகமாடிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் தாஜுதீன் (54). ராஜஸ்தானில் இருந்து மொத்தமாக ஆடுகளை வாங்கி, தமிழகம் முழுவதும் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறார்.
கோடம்பாக்கம், ட்ரஸ்ட்புரத்தைச் சேர்ந்த சம்பத் (50) என்பவர் இவரிடம் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியில் உள்ள வியாபாரியிடம் 73 ஆடுகளை கொடுத்துவிட்டு, அதற்கான பணத்தை வாங்கி வருமாறு சம்பத்தை தாஜுதீன் கடந்த 25-ம் தேதி இரவு அனுப்பி வைத்தார்.
அதன்படி, லோடு வண்டியில் ஆடுகளை ஏற்றிச் சென்று மறுநாள் காலை அந்த வியாபாரியிடம் ஒப்படைத்த சம்பத், அதற்கான பணம் ரூ.14.63 லட்சத்தை வாங்கிக் கொண்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
மதுரவாயலை நெருங்கிய நிலையில், மயக்கம் வருவதுபோல உணர்ந்த சம்பத், வண்டியை ஓரமாக நிறுத்தியுள்ளார். சிறிது நேரம் கழித்து எழுந்த அவர், பணத்தைக் காணாமல் திடுக்கிட்டார்.
முதலாளியை செல்போனில் தொடர்பு கொண்ட அவர், “உடல் சோர்வு காரணமாக மயக்கமடைந்து விட்டேன். பைக்கில் வந்த 2 பேர் கவனித்து, முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர். அவர்கள் போன பிறகுதான், பணம் திருடுபோனதை கவனித்தேன்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து, மதுரவாயல் காவல் நிலையத்தில் தாஜுதீன் புகார் கொடுத்தார். முதல் கட்டமாக, சம்பத்திடம் போலீஸார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், சம்பத் கூறியதுபோல எந்த சம்பவமும் நடக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, சம்பத்தின் வீட்டில் சோதனை நடத்திய போலீஸார், மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.14.63 லட்சத்தை கைப்பற்றினர்.
பணத்தை அபகரிக்கும் நோக்கில், மயக்கம் வந்ததாக கூறி நாடகமாடியதை சம்பத் ஒப்புக்கொண்டார். அவரை போலீஸார் கைது செய்தனர்.