

விருதுநகர்: பள்ளிவாசலுக்கு மந்திரிக்கச் சென்ற இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து, கத்தியால் குத்திய பள்ளிவாசல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள வீரசோழன் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் (25). இவர் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் மந்திரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
இந்நிலையில், 22 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் மாலை தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் மந்திரிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, அந்த இளம்பெண்ணை அப்துல் அஜீஸ் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். உடனே அப்துல் அஜீஸ் தான் வைத்திருந்த சிறிய கத்தியால் இளம்பெண்ணின் உடலில் பல இடங்களில் குத்தியுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண் பள்ளிவாசலில் இருந்து அலறியபடி வெளியே ஓடி வந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்சுழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், தப்பியோட முயன்ற அப்துல் அஜீஸை பிடித்து, நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக நரிக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்துல் அஜீஸை கைது செய்துனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.