

கூடுவாஞ்சேரி: சிங்கப்பெருமாள் கோவில் சின்ன செங்குன்றம், வண்டிக்காரன் தெருவை சேர்ந்த திலீபன் (35), தனியார் நிறுவன ஊழியர். இவர் கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் குடியிருப்பில் வசிக்கும் தன் பெரியம்மா சரஸ்வதியை (65) காணவில்லை என கடந்த ஏப். 29-ம் தேதி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், சரஸ்வதியின் வீட்டுக்கு அருகே வசிக்கும் வினோத்குமார் (35), கொடைக்கானலில் வசிக்கும் தன் நண்பர் தீபன் சக்கரவர்த்தியுடன் சேர்ந்து சரஸ்வதியை கொலை செய்து பின்னர் தலைமறைவாகி இருப்பது தெரிந்தது.
இதையடுத்து கொலையாளிகளின் மொபைல் போன் சிக்னலை வைத்து கொடைக்கானல் விரைந்த போலீஸார் அங்கு தீபன் சக்கரவர்த்தியை கைது செய்தனர்.
விசாரணையில், வினோத்குமாருடன் சேர்ந்து சரஸ்வதியின் மூக்கு, வாயை பொத்தி கொன்று அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை கொள்ளையடித்ததை தீபன் போலீஸாரிடம் தெரிவித்தார்.
மேலும், சரஸ்வதியின் உடலை காரில் எடுத்து சென்று திருவள்ளூர், வெள்ளவேடு, தாத்ரீஸ்வரர் கோயில் அருகே உள்ள ஏரியில் வீசியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சரஸ்வதியின் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக செங்கை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தீபன் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள வினோத்குமாரை, போலீஸார் தேடி வருகின்றனர்.