ஆவடி | இன்ஸ்டாகிராம் நட்பு காரணமாக ஆட்டோவில் மனைவியை கொன்றவர் கைது

 வைதேகி, சின்னா

வைதேகி, சின்னா

Updated on
1 min read

ஆவடி: இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பர்களுடன் பழகியதால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆட்டோவில் மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

அம்பத்தூர்- கள்ளிக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்த ஆட்டோவிலிருந்து பெண் ஒருவர் கழுத்தில் ரத்தம் சொட்ட வேகமாக இறங்கி ஓடினார். சிறிது நேரத்தில் அவர் சாலையோரத்திலேயே இறந்தார்.

தகவலறிந்த புதூர் போலீஸார் விசாரணை நடத்தியதில், அப்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீஸார் அந்த

பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறகு வழக்குப் பதிவு செய்த போலீஸார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண், அம்பத்தூர் மேனாம்பேடு, இந்திரா நகரை சேர்ந்த வைதேகி (28) என்பதும், அவரது கணவர் சின்னா(32) கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அம்பத்தூர் காமராஜபுரம் பகுதியில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த சின்னாவை போலீஸார் கைது செய்தனர். சின்னாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:

ஆட்டோ ஓட்டுநரான சின்னாவும், வைதேகியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை உள்ளனர். வைதேகி கடந்த 2 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அதிக நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார்.

இதனால் ஆண் நண்பர்கள் பலர் கிடைத்துள்ளனர். அவர்களில் சிலருடன் வைதேகி நட்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சின்னா தன் மனைவியை பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

இதனால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. ஆகவே, வைதேகி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தன் கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் வெளியூருக்கு சென்றார்.

பிறகு வைதேகி சமீபத்தில் திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தன் சகோதரி வீட்டுக்கு வந்து, அங்கு வசித்து வந்துள்ளார். சின்னா அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

அதன் பிறகும் வைதேகி, அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே செல்வதும் ஒரு வாரம் கழித்து வீடு திரும்புவதுமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த கோபத்திலிருந்து வந்த சின்னா, வைதேகியை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு வைதேகியிடம், `நீ ஆட்டோவை ஓட்டு, நான் பின்னால் அமர்ந்து வருகிறேன்' என்று சின்னா கூறியுள்ளார்.

இதையடுத்து வைதேகி ஆட்டோ ஓட்டிச் செல்ல பின்னால் அமர்ந்திருந்த சின்னா, ஆள் நடமாட்டம் இல்லாத கள்ளிக்குப்பம் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வைதேகியின் கழுத்தை அறுத்துள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p> வைதேகி,&nbsp;சின்னா </p></div>
ஒரு கணக்கெடுப்பாளருக்கு 3,000 வீடுகள் ஒதுக்கீடா? - ‘சென்சஸ்’ அலுவலர்களின் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in