

விஜயகுமார்
மேடவாக்கம்: மேடவாக்கம் வெள்ளக்கல் சுடுகாடு அருகே நேற்று நீண்ட நேரமாக இருசக்கர வாகனத்துடன் நின்றிருந்த இளைஞரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் நண்பருக்காகக் காத்திருப்பதாகவும், முன்னுக்குப்பின் முரணாகவும் பேசியதால் சந்தேகமடைந்த போலீஸார் அவரைச் சோதனையிட்டனர்.
அப்போது அவரது இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட போதை தரும் 300 மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கோவிலம்பாக்கம் காந்தி நகர் 24-வது தெருவைச் சேர்ந்த விஜயகுமார் (21) என்பதும், மேடவாக்கம் காவல் நிலையத்தில் சி-பிரிவு சரித்திரப் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளவர் என்பதும் தெரியவந்தது.
மும்பையைச் சேர்ந்த ஒருவர் இந்த போதை மாத்திரைகளைச் சென்னைக்குக் கொண்டு வந்து கொடுத்துச் செல்வதாகவும், அதை விலைக்கு வாங்கும் விஜயகுமார் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் பள்ளி மாணவர்களிடம், அதிகப்பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, அவர்களையும் மாத்திரை விற்பனையில் ஈடுபடுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு அட்டையில் உள்ள 10 மாத்திரைகளை விற்பனை செய்தால், அதற்கான கூலியாக ரூ.1000 அல்லது இரண்டு போதை மாத்திரைகளை வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இத்தகவல் போலீஸாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதையடுத்து, விஜயகுமார் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரிடமிருந்த 300 போதை மாத்திரைகள், விற்பனைக்குப் பயன்படுத்திய செல்போன், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.