

சென்னை: ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சிவகணேசன் (38). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக உள்ளேன்.
இந்த நிறுவனம் சார்பில் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் 60 ஏக்கரில் மனைப்பிரிவு (லே-அவுட்) போடப்பட்டுள்ளது. அந்த மனைப்பிரிவின் முன் பகுதியில் உள்ள 1,050 ச.மீ. இடத்தை அரசு சாலை விரிவாக்கத்துக்கு நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்தியது.
அதற்கு ஈடாக அரசு வழங்கிய இழப்பீடு தொகை ரூ.16 கோடியை, மோசடி நபர் ஒருவர் போலி ஆவணம் மூலம் பெற்றுவிட்டார். முன்னதாக அந்த நபர் எங்களது நிலத்தை, போலி ஆவணம் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்துவிட்டார்.
இதை அடிப்படையாக வைத்தே ரூ.16 கோடியை பெற்றுள்ளார். எனவே அவரை கண்டறிந்து கைது செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த சி.ஆர்.நடராஜன் (55) என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர், இவர் எலெக்ட்ரிக் கடை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.