தேசிய கல்விக்கொள்கை பரிந்துரையின்படி மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழி கற்கும் திட்டம்: யுஜிசி உத்தரவு

தேசிய கல்விக்கொள்கை பரிந்துரையின்படி மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழி கற்கும் திட்டம்: யுஜிசி உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தேசிய கல்விக்கொள்கை யின் பரிந்துரைகளின்படி, உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் மேலும் ஒரு இந்தியமொழியை கற்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’ என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி அனுப்பிய சுற்றறிக்கை: மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை–2020, தேசிய ஒருமைப்பாடு, அனைவருக்கான வளர்ச்சி ஆகியவற்றுக்காக, பன்மொழி திறன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.

அதன் ஒருபகுதியாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ‘மேலும் ஒரு இந்திய மொழியை கற்போம்’ (பாரதிய பாஷா சமிதி) எனும் திட்டத்தை செயல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. இது, மாணவ, மாணவிகளுக்கு மற்ற இந்திய மொழிகளையும் கற்க ஊக்கமாக அமையும். இதன்மூலம், கலாச்சாரப் புரிதல் மேம்படுத்தப்பட்டு, எதிர் காலத்தில் எங்கும் வேலைவாய்ப்புகளைப் பெற மாணவர்களுக்கு உதவும்.

எனவே, மேலும் ஒரு இந்திய மொழியை கற்போம் திட்டத்தை உயர்கல்வி நிறுவனங்களில் அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை யுஜிசி வகுத் துள்ளது. அதன்படி உயர்கல்வி நிறுவனங்கள் இந்திய மொழிகள் குறித்த படிப்புகளை ‘கிரெடிட் ஸ்கோர்ஸ்’ வாயிலாக வழங்கி, மாணவர்களை கற்க ஊக்குவிக்க வேண்டும்.

அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒரு உள்ளூர் மொழி மற்றும் பட்டியலிடப்பட்டுள்ள 22 இந்திய மொழிகளில் ஏதேனும் 2 மொழிகள் என குறைந்தது 3 மொழிகளைக் கற்பிக்கலாம். உயர்கல்வி நிறுவனங்கள், ஆரம்ப நிலை, இடை நிலை, முதன்மை என மூன்று விதமாக இந்த படிப்புகளை வழங்கலாம் தேவைக்கு ஏற்ப, படிப்பில் சேரவும், வெளியேறவும் வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், ஆசிரியர்களும், பணியாளர்களும் இந்த மொழி படிப்புகளை படிக்கலாம். மாணவர்கள் மட்டுமல்லாது, அவர்களின் நண்பர்கள், பெற்றோர், பாதுகாவலர்களையும் இந்த படிப்பில் இணைக்கலாம்.

இந்த மொழி படிப்புகளை, நேரடிமற்றும் ஆன்லைன் வாயிலாக வழங்க வேண்டும். வயது வரம்பாக 16 என நிர்ணயம் செய்யலாம். அனைத்து உயர்கல்வி நிறுவனங் களும், வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி ‘மேலும் ஒரு இந்திய மொழியை கற்போம்’ திட்டத்தை தங்களது நிறுவனங்களில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

தேசிய கல்விக்கொள்கை பரிந்துரையின்படி மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழி கற்கும் திட்டம்: யுஜிசி உத்தரவு
தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க காசிக்கு 7 சிறப்பு ரயில் சேவைகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in