

சேலம்: சேலம் அருகே பெண் தோழியையும் அவரது 10 வயது மகனையும் வெட்டிக் கொலை செய்த ஆண் நண்பர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பொட்டியபுரம் கருத்தானூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி சத்யா (33). இவர்களுக்கு மகன் கிஷாந்த் (10 மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
ராஜ்குமார் தற்போது சத்யாவை பிரிந்து வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த சத்யா, ஓமலூரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அந்நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த சேலம் ஜான்சன் நகரைச் சேர்ந்த சக்திவேல் (30) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சத்யா தலையில் வெட்டுக்காயத்துடன், ஒரு கை துண்டான நிலையில் அருகில் இருந்த தந்தையின் வீட்டுக்கு ஓடி வந்துள்ளார்.
பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். சத்யாவின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, சிறுவன் கிஷாந்த் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து இருவரையும் சேலம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். கிஷாந்த் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், சத்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து ஓமலூர் போலீஸார் கூறியதாவது: வெள்ளக்கல்பட்டியில் வசித்து வந்த சத்திவேல் நேற்று முன்தினம் இரவு சத்யா வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சத்யா, அவரது மகனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினார். சக்திவேலை தேடியபோது கருப்பூர் கோரிமேடு பகுதியில் அவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு தெரிவித்தனர். இந்தச் சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.