

சரணடைந்த அழகு ராஜா (உள்படம்) மயிலை சிவக்குமார்
சென்னை: மயிலாப்பூரில் முக்கிய ரவுடியாக வலம் வந்தவர் சிவக்குமார். இவர் மீது 35 குற்ற வழக்குகள் இருந்தன. கரோனா கால கட்டத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு அசோக் நகரில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அசோக் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், சிவக்குமாரை கொலை செய்தாகக் கூறி 5 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அசோக் நகர் போலீஸார் அந்த 5 பேரையும் அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.
போலீஸாரின் தொடர் விசாரணையில் 1997-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி தோட்டம் சேகரின் கொலைக்கு பழிவாங்க தோட்டம் சேகரின் மகனான, அழகுராஜா திட்டம் தீட்டி 24 ஆண்டுகளுக்கு பின் மயிலை சிவக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கு மட்டுமல்லாமல் பல குற்ற வழக்குகளிலும் அழகு ராஜா சம்பந்தப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே தனிப்படை போலீஸார் அழகுராஜாவை பிடிக்க முயன்ற நிலையில், அவர் காரை நிறுத்தாமல் வேகமாகச் சென்று தப்பினார்.
அசோக் நகர் போலீஸார் அழகு ராஜாவை தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் அவர் சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.