

சென்னை: மாலத்தீவில் கடந்த டிச.2 முதல் 6-ம் தேதி வரை 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா ஆகியோர் பதக்கங்களை வென்றனர்.
இதில் கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடியும், காசிமாவுக்கு ரூ.50 லட்சமும், மித்ராவுக்கு ரூ.40 லட்சமும் என ரூ.1.90 கோடி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, கீர்த்தனா, காசிமா ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி வாழ்த்தினார்.
மேலும், சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, அபே சிங், அனஹத் சிங், வேலவன் செந்தில்குமார், ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இயக்குநர் சைரஸ் போன்சா மற்றும் பயிற்றுநர்கள் ஹரிந்தர் பால் சிங், ஆலன் சோய்சா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நிகழ்வில், விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.