மதுரை நகைக்கடை கொள்ளை முக்கிய குற்றவாளி நிஷாந்த் தருமபுரி அருகே கைது

மதுரை நகைக்கடை கொள்ளை முக்கிய குற்றவாளி நிஷாந்த் தருமபுரி அருகே கைது
Updated on: 
1 min read

மதுரை: மதுரையில் பிரபல நகைக்கடையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதில் முக்கிய குற்றவாளியான நிஷாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்னி பேருந்தில் பயணித்த அவரை போலீசார், தர்மபுரி அருகே சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

மதுரையில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல தனிஷ்க் நகைக்கடையில் பல கோடி மதிப்புள்ள நகை கொள்ளைபோனது. இவ்வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட நிஷாந்த் தப்பிய நிலையில், அவரது தோழி மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் தப்பிச்சென்ற நிஷாந்தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

நேற்றைய தினம் சேலம் , தர்மபுரி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸார் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்தில் நிஷாந்த் பயணித்த போது, நிஷாந்தின் நடமாட்டம் குறித்து சந்தேகமடைந்த ஓட்டுநர் அதியமான் கோட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி பைபாஸ் பகுதியில் ஆம்னி பேருந்தில் நிஷாந்த் சென்று கொண்டிருந்தபோது அதியமான் கோட்டை போலீஸார் பேருந்தை நிறுத்தி நிஷாந்தை கைது செய்தனர்.

போலீஸாரை கண்டதும் நிஷாந்த் ஜன்னல் வழியாக தப்பியோட முயன்றார். இருப்பினும் போலீஸார் அவரை சுற்றி வலைத்து பிடித்துள்ளனர். தொடர்ந்து தனிப்படைபோலீஸாருக்கு தகவல் தெரிவித்து தனிப்படையினர் மதுரையிலிருந்து தர்மபுரிக்கு விரைந்துள்ளனர். விரைவில் நிஷாந்த் மதுரைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் மீதம் உள்ள நகைகளை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

மதுரை நகைக்கடை கொள்ளை முக்கிய குற்றவாளி நிஷாந்த் தருமபுரி அருகே கைது
“வனவிலங்குகளை அச்சுறுத்திய வன்னியரசுவிடம் விசாரணை நடத்த வேண்டும்”- டிடிவி தினகரன்

X