

மதுரை எல்ஐசி அலுவலக தீ விபத்து
மதுரை: மதுரை மேலவெளி வீதி எல்ஐசி அலுவலகத்தில் நேற்று இரவு நடந்த தீ விபத்தில் முதுநிலை மேலாளர் இறந்ததுடன், ஏராளமான கடன், பாலிஸி பத்திரங்கள் எரிந்துள்ளன. இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
மதுரை மேலவெளி வீதியில் ரயில் நிலையம் எதிரிலுள்ள எல்ஐசி கட்டிடத்தின் 2-வது தளத்தில் எல்ஐசி யூனிட்-1 அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சிலர் இரவு வரை பணிபுரிந்துவிட்டு தாமதமாக செல்வது வழக்கம்.
நேற்று இரவு 9 மணி அளவில் வழக்கம்போல் ஊழியர்கள் சிலர் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது அலுவலகத்தில் திடீரென தீ பற்றியது. தொடர்ந்து மளமளவென பரவிய தீ, கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் பதற்றமடைந்த ஊழியர்கள் ஓடி தப்பினர். சிலர் கட்டிடத்துக்குள் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, கட்டிடத்தில் சிக்கிய ஊழியர்களை மீட்டனர். அதன்பிறகு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இக்கட்டிடத்தின் தனியறையில் சிக்கிய முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி (55) தீயில் கருகி உயிரிந்தார். நெல்லையைச் சேர்ந்த இவர், மதுரை வானொலி நிலைய அறிவிப்பாளர் அழகியநம்பியின் மனைவி ஆவார்.
தீ விபத்தில் மேலாளர் அறை உள்ளிட்ட பக்கத்து அலுவலக அறையிலுள்ள காப்பீட்டு திட்டம் தொடர்பான சில ஆவணங்கள், கணினி உள்ளிட்ட மின் சாதனங்களும் எரிந்து நாசமாகியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
உயிரிழந்த முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி
மேலாளர் அறையில் இருந்து ஏசி மிஷனில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து நேரிட்டது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனாலும், தீவிபத்துக்கு வேறு காரணங்கள் இருக்கலாமா என்பது குறித்து தீயணைப்பு, காவல்துறையினர் அடங்கிய நிபுணர் குழுவினர் விசாரிக்கின்றனர்.
தீ விபத்து நடந்த கட்டிடத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் பிரவீன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.
உயிரிழந்தவர் அணிந்திருந்த நகை மாயம்: போலீஸார் கூறுகையில், “எல்ஐசி கட்டிட தீவிபத்தில் உயிரிழந்த பெண் மேலாளர் கல்யாணி நம்பி கழுத்தில் சுமார் 15 பவுன் நகை அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கி அவரை மீட்கப்பட்ட அறையில் அவரது கழுத்தில் நகை எதுவும் இல்லை. நகை எதுவும் அணிந்து இருந்தாரா என்று தேடியபோதும் கிடைக்கவில்லை. ஒருவேளை தீயில் உருகி சேதமடைந்து இருக்கலாம் என்ற கோணத்திலும், யாரும் எடுத்துச் சென்றார்களா என்ற அடிப்படையிலும் விசாரிக்கிறோம்” என்றனர்.