

சென்னை: அரும்பாக்கத்தில் ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் திருடப்பட்ட வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை அரும்பாக்கம், ஜெகந்நாத நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார்.
தெற்கு ரயில்வே அதிகாரி. இவர் கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி இரவு மனைவி விமலா, மகன் ஹித்தேஷ் உடன் தூங்கினார். மறுநாள் அதிகாலை விமலா கண்விழித்து எழுந்து கதவை திறக்க முயன்றபோது, அது வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக, அவர் போன் மூலம் அக்கம்பக்கத்தினரை அழைத்தார். அவர்கள் வந்து கதவை உடைத்து திறந்துவிட்டனர். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது, மற்றொரு அறையில் வைக்கப்பட்டிருந்த செல்போன், 3 பவுன் நகை, ரூ80,000 ரொக்கம், வெள்ளி கைச்செயின், கொலுசு ஆகியவற்றை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் நந்தகுமார் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (37) என்பது தெரிந்தது.
தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். முத்துக்கிருஷ்ணன் ஒரு வீட்டுக்குள் புகுந்தவுடன் படுக்கையறை கதவை வெளிபக்கமாக பூட்டிவிட்டு திருடுவதை வழக்கமாகக் கொண்டவர்.
அவர் மீது ஏற்கெனவே திருமுல்லைவாயல், பெரவள்ளூர், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன என போலீஸார் தெரிவித்தனர்.