

புகாரி
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்து விடுவதாக மிரட்டி தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளரிடம் 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில்குமார். தங்க வியாபாரம் செய்து வருகிறார். இவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து கைது செய்து விடுவதாக மிரட்டி, ரூ.40 லட்சம் வரை பணம் பறித்ததாக பரங்கிமலை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய புகாரி, அவருக்கு உடந்தையாக இருந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரையும் யானைகவுனி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காவல் ஆய்வாளர் புகாரியை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இந்நிலையில், மேலும் விசாரணை நடத்துவதற்காக ஆய்வாளர் புகாரி, சீனிவாசன் ஆகிய இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று யானைகவுனி போலீஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து, இருவரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம், பணம் பறித்த விதம், பணம் கொடுக்கப்பட்ட இடங்கள் மற்றும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? புகாரி வேறு யாரிடமாவது இதே பாணியில் பணம் பறித்துள்ளாரா? என்பன உட்பட பல்வேறு கோணங்களில் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.