அதிமுக எம்எல்ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சட்டப்பேரவையில் கூச்சல், அமளி - அதிமுக - தவெக உறுப்பினர்கள் காரசார விவாதம்

அதிமுக எம்எல்ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சட்டப்பேரவையில் கூச்சல், அமளி - அதிமுக - தவெக உறுப்பினர்கள் காரசார விவாதம்
Updated on
2 min read

சென்னை: அதிமுக எம்​எல்​ஏ.க்​கள் ராஜி​னாமா விவ​காரம் தொடர்​பாக சட்​டப்​பேர​வை​யில் நேற்று கூச்​சலும் அமளி​யும் ஏற்​பட்​டது. அப்​போது தவெக - அதி​முக உறுப்​பினர்​கள் கார​சார விவாதத்​தில் ஈடு​பட்​டனர்.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று பொது பட்​ஜெட் மற்​றும் வேளாண் பட்​ஜெட் மீதான விவாதத்​தில் முன்​னாள் முதல்​வர் கே.பழனி​சாமி பேசி​னார். அப்​போது நடை​பெற்ற விவாதம் வரு​மாறு:

முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி: கடந்த 3 மாதங்​களில் தவெக அரசின் குறிப்​பிடத்​தக்க சாதனை ஏதோ ஒரு பேரம் நடத்தி சில கட்​சிகளை​யும், கட்சி உறுப்​பினர்​களை​யும் வாங்​கியது​தான். இது​தான் இந்த அரசி்ன் சிறப்​பான சாதனை.

அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா: 2017-க்கு முன்பு இருந்த அதி​முக ஆட்​சி​யில் எங்​களுக்கு உடன்​பாடு உண்​டு. அது ஜெயலலி​தா​வின் ஆட்​சி. ஆனால், 2017-க்கு பிறகு உங்​கள் தலை​மையி​லான அதி​முக ஆட்​சி​யில் எங்​களுக்கு உடன்​பாடு இல்​லை. அது ஜெயலலிதா ஆட்சி கிடை​யாது.

ஜெயலலிதா இருந்​தவரை நீட் வரவில்​லை, சிஏஏ வரவில்​லை. அதனால்​தான் எங்​கள் முதல்​வர் நீர்த்​துப்​போன ஆட்சி என்று உங்​களை சொன​னார். உங்​கள் மீது நம்​பிக்கை இருந்​திருந்​தால், உங்​கள் உறுப்​பினர்​கள் ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் சேர வேண்​டிய அவசி​யம் இல்​லை.

உங்​கள் தலைமை மீது நம்​பிக்கை இல்​லாமல் அதி​முக தொண்​டர்​கள் முழு​வது​மாக வில​கிய​தால் தான் எம்​ஜிஆரின் விசு​வாசிகளும் ஜெயலலி​தா​வின் விசு​வாசிகளும் தவெக​வில் இணைந்து பணி​யாற்றி வரு​கிறார்​கள். பேரம் என்று சொல்​வது தவறு. உறுப்​பினர்​கள் கட்​சித் தலைமை மீது நம்​பிக்கை இழந்து ராஜி​னாமா செய்து மாற்​றுக் கட்​சி​யில் சேர்​வது இயல்​பு.

அமைச்​சர் சி.டி. நிர்​மல்​கு​மார்: இது கூவத்​தூர் இல்​லை. தானாக முன்​வந்து ராஜி​னாமா செய்து எங்​கள் கட்​சி​யில் சேர்ந்து உள்​ளனர். இதில் எந்த கூவத்​தூர் நிகழ்ச்​சி​யும் நடை​பெற​வில்லை (அப்​போது முன்​வரிசை​யில் அமர்ந்​திருந்த முக்​கூர் சுப்​ரமணி​யன், அக்ரி கிருஷ்ண​மூர்த்தி உள்​ளிட்ட அதி​முக உறுப்​பினர்​கள் தங்​கள் இருக்​கை​யில் இருந்து எழுந்​து, அமைச்​சர்​களின் பேச்​சுக்கு எதிர்ப்பு தெரி​வித்து சத்​தமிட்​டனர்.

பதி​லுக்கு எதிர் வரிசை​யில் இருந்த தவெக உறுப்​பினர்​களும் இருக்​கை​யில் இருந்து எழுந்து சத்​த மிட்​டனர். இதனால், பேர​வை​யில் கூச்​சலும் அமளி​யும் நில​வியது.

பேரவைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர்: கடந்த 45 நிமிடங்​கள் முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி தனது ஆட்​சி​யின் சாதனை​களை அமை​தி​யாக சொன்​னார். கடைசி​யாக சொன்ன சில கருத்​துகள் ஆளும் கட்​சி​யினர் பேசுவதற்கு வழி வகுத்​துள்​ளது.

இரண்டு (தி​முக, அதி​முக) பேரும் சேர்ந்து கொண்டு பேசுவது எனக்குத் தெரி​யும். தயவுசெய்து உறுப்​பினர்​கள் அவர​வர் இருக்​கை​யில் போய் அமருங்​கள்.

திமுக கொறடா எ.வ.வேலு: குதிரை பேர விவ​காரத்​தில் நாங்​கள் இரு​வரும் சேர்ந்து பேச வேண்​டிய அவசி​யம் இல்​லை. எங்​களுக்கு எதிர்க்​கட்சி என்ற அந்​தஸ்து உள்​ளது.

நாங்​கள் நடுநிலை​யாக நடந்து கொண்​டுள்​ளோம். அது​தான் எங்​களது பாது​காப்​பு. நாங்​கள் ஆண்ட கட்​சி. அதி​முக​வும் ஆண்ட கட்​சி. அடுத்த முறை ஆளலாம் என்று திட்​டம் போட்டு இருக்​கும் கட்​சி.

அமைச்​சர் ராஜ்மோகன்: ஆக்​கப்​பூர்​வ​மான, ஆரோக்​கிய​மான கருத்தை எதிர்​கொள்ள நாங்க தயா​ராக உள்​ளோம்.

பழனி​சாமி: அதி​முக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​று​விட்டு பின்​னர் ராஜி​னாமா செய்​து​விட்டு இன்​னொரு கட்​சி​யில் சேர்ந்​திருப்​பதை பார்த்து அதி​முக தொண்​டர்​கள் கொதித்​துப் போயிருக்​கிறார்​கள்.

ஏறத்​தாழ 6 ஆயிரம் பேர் உழைத்​துத்​தான் ஒரு தொகு​தி​யில் வெற்றி பெறுகிறார்​கள். திமுக​வும் அதி​முக​வும் உங்​கள் காலத்​தி​லும் (பேரவைத் தலை​வர் அதி​முக​வில் இருந்த காலம்) ஒன்​றாக சேர​வில்​லை.

இப்​போது எங்​கள் காலத்​தி​லும் ஒன்​றாக சேர​வில்​லை. நாங்​கள் சேர்ந்து செயல்​படு​கிறோம் என்று பேர​வைத் ​தலை​வர் கூறு​வது தவறு.

பேரவைத் தலை​வர்: நீங்​கள் இரு​வரும் ஒன்​றாக இணைந்து செயல்​படு​கிறீர்​கள் என்று சொன்​ன​தில் எந்​த​வித தவறான அர்த்​த​மும்​ இல்​லை. உள்​நோக்​க​மும்​ இல்​லை. இவ்​வாறு வி​வாதம்​ நடந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in