சேலம் அருகே கும்பல் தாக்கியதில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு!

சேலம் அருகே கும்பல் தாக்கியதில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு!
Updated on
1 min read

சேலம்: சேலம் அருகே 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள மின்னாம் பள்ளியைச் சேர்ந்த மேளம் அடிக்கும் தொழிலாளி ஜெயகாந்த்.

இவர் கடந்த 1-ம் தேதி மேளம் அடிக்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுதொடர்பாக காரிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த அருணாச்சலம், முகமது இஸ்மாயில், 17 வயது சிறுவன், மின்னாம்பள்ளியைச் சேர்ந்த மணிகண்டன், பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயகாந்த் உயிரிழந்தார். இதையடுத்து, காரிப்பட்டி போலீஸார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே, ஜெயகாந்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார் அவர்களை சமாதானம் செய்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க கூறினர். இதையடுத்து, சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த உறவினர்கள், ஜெயகாந்த் கொலையில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும், என மனு அளித்தனர்.

உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.

சேலம் அருகே கும்பல் தாக்கியதில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு!
“வெளியூர்காரர்களால்தான் திருப்பரங்குன்றத்தில் பதற்றம்” - கோ.தளபதி எம்எல்ஏ குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in