

சென்னை: மதுரவாயல், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் வர்ஷா(20). இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சக்திவேல்(20) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களிலேயே இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவரைப் பிரிந்து மதுரவாயலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வர்ஷா சென்றார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மேமாதம் மனைவி வர்ஷா வீட்டுக்குச் சென்ற சக்திவேல், தகராறில் ஈடுபட்டு மனைவியைக் கத்தியால் தாக்கியுள்ளார். மதுரவயல் போலீஸார் வழக்குப் பதிந்து சக்திவேலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சக்திவேல், தன் மனைவியை பழிவாங்கும் எண்ணத்தில் நேற்று அதிகாலை நண்பர் சதீஷ்(23) உடன் சென்று மனைவி வீட்டின் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளார்.
நாட்டு வெடிகுண்டு வெடித்த சத்தத்தைக் கேட்டு வர்ஷா மற்றும் குடும்பத்தினர் வெளியே ஓடி வந்தனர். அப்போது பைக்கில் தப்ப முயன்ற சக்திவேல் மற்றும் சதீஷை பொதுமக்கள் மடக்கி பிடிக்க முயன்றனர்.
ஆனால், கத்தியைக் காட்டி மிரட்டி, இருவரும் தப்பி ஓடி விட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் வர்ஷா புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சக்திவேல், சதீஷை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.