

சென்னை: பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஸ்டான்லி மருத்துவமனை வார்டு ஊழியர் கைது செய்யப்பட்டார். கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவருக்கு வலது கால் பாதத்தில் அறுவை சிகிச்சை செய்து கட்டுப் போடப்பட்டுள்ளது.
மருத்துவமனை செல்வதில் சிரமம் இருந்ததால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக (ஊழியர்) பணி செய்து வரும் கொடுங்கையூரைச் சேர்ந்த சேகர் (58) என்பவர் அப்பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு காலில் டிரஸ்ஸிங் செய்து வந்தார்.
வழக்கம் போல், கடந்த 21-ம் தேதி மதியம் சேகர் அப்பெண்ணின் காலில் டிரஸ்ஸிங் செய்ய அவரது வீட்டுக்குச் சென்ற போது, வீட்டில் அப்பெண் மற்றும் அவரது பேரன் மட்டும் இருப்பதை அறிந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்பெண் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சேகரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.