

பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருள் கடத்திய படகு.
ராமேசுவரம்: இந்தியப் பெருங்கடலில் மீன்பிடி படகில் கடத்திய ரூ.100 கோடி மதிப்பிலான 323 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப் பொருளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்தனர்.
சர்வதேச கடற்பகுதியில் போதைப் பொருட்களை கடத்திச் செல்லும் படகுகள் மற்றும் கப்பல்கள் பற்றி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் தெற்குப் பகுதியிலுள்ள திக்கோவிட்டவில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் சந்தேகத்துக்குரிய ஆழ்கடல் மீன்பிடி படகைக் கண்டனர்.
இதையடுத்து அந்தப்படகை இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலில் சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் சோதனை செய்தபோது 298 பொட்டலங்களில் பதுக்கி வைத்திருந்த 323 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் சர்வதேச மதிப்பு ரூ.100 கோடி ஆகும். படகிலிருந்த இலங்கையைச் சேர்ந்த 6 பேரை கடற்படையினர் கைது செய்தனர். பறிமுதலான போதைப் பொருட்களுடன் 6 பேரையும் திக்கோவிட்ட கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றனர்.
இந்தப் போதைப் பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, கடத்தலில் தொடர்புடையோர் யார் என்பது குறித்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.