

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அரசு பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு தொடக்க பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக 1098 என்ற சைல்ட் லைன் எண்ணுக்கு புகார் வந்தது.
இதையடுத்து, சைல்டு லைன் அலுவலர்கள் மற்றும் சிறார் காவல் பிரிவு சமூக பணியாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று குழந்தைகளிடம் உரையாடினர். அப் போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 13 மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் தில்லைநாயகி, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.